இந்த சாதிச் சனியனால் என்ன சாதிக்கப் போகிறோம்! – தமிழருவி மணியன்

னிதர்கள் யாரும் இந்த நாட்டில், இந்த ஊரில், இந்த சாதியில், இன்னாருக்குப் பிறக்க வேண்டும் என்று இறைவனிடம் மனுப்போட்டு வந்து சேரவில்லை. இந்த சாதிச் சனியனை ஏன் நம்மால் முற்றாகப் புறம் தள்ள முடியவில்லை என்பதை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் அறிவுறுத்தி என்ன பயன்? ஆண் என்றும் பெண் என்றும் சாதி இரண்டன்றி வேறில்லை என்று ஒளவை அழுத்தமாகத் தெளிவுபடுத்திய பின்பும் நமக்கு ஏன் அந்த உண்மை விளங்கவில்லை? எல்லாரும் ஓர் குலம்… எல்லாரும் ஓர் இனம் என்று பாரதி உரத்த குரலில் முழங்கிய பின்பும் வேற்றுமைகளிலிருந்து ஏன் நம்மால் விடுபட முடியவில்லை?

சாதியாலும் மதத்தாலும் நாம் பிரிந்து பகை வளர்ப்பதனால் எதைச் சாதிக்கப்போகிறோம்? சாதிமல்லி என்று பூவுக்கும் சாதி பார்க்கும் இழிந்த புத்தியை இன்னும் எவ்வளவுகாலம் நாம் சுமந்து சீரழியப் போகிறோம்? ஒன்றை இரு கூறாய்ப் பிரித்துப் பார்ப்பது அஞ்ஞானம்; இரண்டை ஒன்றாகச் சேர்த்துப் பார்ப்பதுதான் உண்மையான ஞானம் என்ற புரிதல் என்றுமே நம்மிடம் வந்து சேராதா? அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று உணர்ந்து வாழ்வதுதானே உன்னதம். காலம் காலமாய் தாழ்த்தப்பட்ட மக்களைத் திருக்குலத்தார் என்று இராமாநுஜர் போற்றி அரவணைத்ததை மறப்பவன் எப்படி வைணவனாக இருக்கமுடியும்? ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே என்ற நாவுக்கரசரின் திருவாக்கை நெஞ்சில் நிறுத்தாதவன் எந்த வகையில் சைவனாக இருக்க முடியும்? சாதியையும் மதத்தையும் வைத்து மனிதர்களில் உயர்வு தாழ்வு கற்பிப்பவன் முதலில் மனிதனாகவே இருக்கமுடியாது.

எந்த நிலையிலும் காந்தியம் வேற்றுமைகளை ஏற்பதில்லை. நம் அனைவருக்கும் மனிதம்தான் மையப்புள்ளி. அரசியலமைப்புச் சட்டம் அரங்கேறிய நாளில் அண்ணல் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் உரை ஆற்றியபோது, “ஒரு மனிதன் ஒரு வாக்கு என்ற நிலையை இன்று அடைந்து விட்டோம். ஒரு மனிதன் ஒரே மதிப்பு என்பதை எப்போது அடையப் போகிறோம்?” என்று ஆழ்ந்த அர்த்தம் செறிந்த கேள்வியொன்றை எழுப்பினார். அந்தக் கேள்விக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை என்பதையே ஊராட்சித் தலைவர் திருமதி இராஜேஸ்வரிக்கு இழைக்கப்பட்ட அவமானம் நமக்கு உணர்த்துகின்றது.

இங்கே சாதி அரசியல் ஆதாயத்தை அடைவதற்கும் வாக்கு வங்கியை வளர்த்தெடுப்பதற்கும் ஒரு வசதியான கருவியாகக் கையாளப்படும்வரை சாதிகளற்ற சமுதாயத்திற்குச் சாத்தியமே இல்லை. இங்குள்ள சாதிக் கட்சித் தலைவர்கள் சிலர் மந்திரிகளாகவும், எம்பிக்களாகவும், எம்எல்ஏக்களாகவும் சமூக வீதிகளில் வலம் வருவதற்காவது சாதி வேற்றுமைகள் இருந்தே தீரும் என்பதுதான் எழுதப்படாத விதி. சிலர் வாழ இங்கு பலர் வாடத்தானே வேண்டும்.

We must learn to live together as brothers or we will perish together as fools (சகோதரர்களாக வாழப் பழகாவிடில், முட்டாள்களாக நாம் மடிவோம்) என்ற மார்டின் லூதர் கிங்கின் அர்த்தமுள்ளவாசகம் எப்போதும் நம் நெஞ்சங்களில் நீங்காமல் நிழலாடட்டும்.

Casg Dicrimination. Tamil NaduTamilaruvi Maniyanசாதிக் கொடுமைதமிழருவி மணியன்தமிழ் நாடு
Comments (0)
Add Comment