கொரோனா இன்னும் தீவிரமானாலும் தமிழகம் சமாளிக்கும்!

ரெண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுட்டு வர்றேன்.

முதல் டோஸ் போட்டது நியூ காலேஜ் எதிர்ல உள்ள அர்பன் ஹெல்த் சென்டர். அங்கதான் போனேன். ஸ்டாக் வரலீங்க; நீங்க மீர்சாகிப் பேட்டைல இருக்ற சென்டர்ல போட்டுக்கலாம்னு சொல்லி ரூட்லாம் சொன்னாங்க டாக்டரம்மா. நேரா செகண்ட் ஃப்ளோர் போங்க..னு வழியனுப்பி வச்சாங்க.

மீர்சாகிப் ஹெல்த் சென்டர் இன்னும் பெருசா இருக்கு. ஓட்டு சாவடிக்கு வர மாதிரி ஜனங்க வந்துகிட்டே இருக்காங்க. நுழைஞ்சதுமே ஒரு நர்ஸ் தடுப்பூசிலாம் ரெண்டாவது மாடிக்கு போலாம்னு சொல்லிட்டே இருக்காங்க.

கார்ப்பரேட் ஆஸ்பிடலுக்கு சேலஞ் விட்ற ரேஞ்சுக்கு படு சுத்தமா இருக்றதுதான் முதல்ல மூளைல பதியுது. முதல் டோசுக்கு போனப்பவும் இதே ஃபீலிங்.

ஒருத்தருக்கு ஒருத்தர் இடிச்சுக்காம நடமாட விசாலமான நடைவழி, அகலமான படிக்கட்டு, அவசியம்னா லிஃப்ட், ஒவ்வொரு தளத்லயும் சுத்தமான கழிப்பறைகள், காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்கும் ஜன்னல்கள், நெருக்கம் இல்லாம உக்கார வசதியான சேர்ஸ்.

எல்லாத்தையும் விட மனச தொட்டது, ஒரே நேரத்ல எத்தன பேரு என்ன கேள்வி கேட்டாலும் முகம் சுளிக்காம பதில் சொல்ற சீருடை பெண்கள். சான்சே இல்ல.

பெயர், ஆதார் நம்பர்லாம் பதிவு பண்ற டேபிள சுத்தி நம்மாளுக கூட்டமா நின்னு கேள்விகள வீசுறாங்க. அந்தம்மா சதாவதானி மாதிரி நிமிந்து பாக்காமலே பதில் சொல்லிகிட்டு, ரிஜிஸ்டர்ல விவரங்கள எழுதி டோக்கன் குடுத்துகிட்டு இருக்காங்க.

அந்த டேபிளுக்கு மேல லைட் இல்ல. கிடைக்கிற வெளிச்சத்த மறைக்கிறோமே..னு ஜனங்களுக்கு உறைக்கல. வரிசைல வந்த மட்டும்தான் பதிவு செஞ்சு டோக்கன் தருவேன்..னு சொன்னா போதும். சொல்ல தோணலயா மனசு வரலையா தெரில.

நண்பர் சொன்னாரு. எதுக்கும் நல்ல ப்ரைவேட் ஆஸ்பிடல்ல போய் போட்டுக்கலாமே..னு. முதல் டோஸ் போடும்போதே மாநகராட்சி சுகாதார மையங்கள் மேல நம்பிக்கை வந்துட்டுது. அதனால அட்வைச கேக்கல. ரெண்டாவது ஊசி போட வந்ததுல அந்த நம்பிக்கை பல மடங்கு அதிகம் ஆயிருக்கு.

தனியார் ஆஸ்பத்திரி பக்கமா நடுத்தர வர்க்கத்த தள்ளிவிட்டது அரசு ஆஸ்பத்திரிகளோட சுத்தம் இல்லாத பராமரிப்புதான். அந்த குறை இப்ப நீங்கிட்டதால இடைவெளி காணாம போயிருச்சு. இத்தனைக்கும் துப்புரவு தொழிலாளர்கள் குறுக்க நெடுக்க போறத பாக்கவே இல்ல.

ஒருவேளை நம்ம ஸ்டேட்ல கொரோனா பரவல் இன்னும் மோசமான ஸ்டேஜுக்கு போனாக்கூட, அத சமாளிச்சு வெற்றிகரமா தாண்டுற அளவுக்கு அட்டகாசமான மருத்துவ கட்டமைப்பு தமிழ்நாட்ல இருக்கு.
தடுப்பூசி மையங்கள் மட்டும் இல்ல. அரசு நிர்வாகத்ல உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள், பெரிய ஆஸ்பத்திரிகள் எல்லாத்லயும் அநேகமா இந்த மாதிரியான நிலைதான் இருக்கு. வெளி மாநில மக்கள் பொறாமை படுவாங்க.

இந்த சிறப்புக்கு எந்த ஒரு தனி மனிதரையும் காரணமா சொல்லிற முடியாது. நமக்கு வாய்த்த சுகாதார துறை அமைச்சர்கள், செயலாளர்கள், ஏனைய அதிகாரிகள், டாக்டர்கள்..னு அத்தனை பேரும் இந்த பெருமைக்கு காரணம். டாக்டர் ஹண்டே, டாக்டர் விஜயபாஸ்கர், சாதிக் பாட்சா, அன்பழகன், நெடுஞ்செழியன் மாதிரி ஆட்கள் சுகாதார அமைச்சரா இருந்திருக்காங்க. ஹண்டே 10 வருஷம் அசல் வழிகாட்டியா இருந்து சாதனை செஞ்சவர். இதுக்கு மேல நிதி ஒதுக்க வழி இல்லைனு நாவலர் கைவிரிச்ச சந்தரப்பங்கள்ல ஹண்டே எப்டி எம்ஜிஆர கன்வின்ஸ் பண்ணி காரியம் சாதிச்சுக்குவார்னு கோட்டைல பல கதைகள் சொல்லுவாங்க.

வழிகாட்றது பெருசு இல்ல. ராதாகிருஷ்ணன் மாதிரி திறமையான அதிகாரிகள், ஆஸ்பிடல் டீன்கள் சுதந்திரமா வேலை செய்ய அமைச்சர்கள் இடம் குடுத்தாங்க. பதிலுக்கு அந்த அதிகாரிங்க சிறப்பான முன்மாதிரியா செயல்பட்டு கீழ்மட்டம் வரைக்கும் அர்ப்பணிப்போட வேலை செய்ய தூண்டுதலா இருக்காங்க.

உயர்ந்த சம்பளம், அதிகமான சலுகைகள் மூலமா மட்டும் இந்த நிலையை தமிழகம் எட்டியிருக்க முடியாது. ரோல் மாடல்கள் இருந்தாதான் இது சாத்தியம். நம்ம சுகாதார துறைல அதுக்கு பஞ்சமே இல்ல.
அமைச்சர் தொடங்கி ஆம்புலன்ஸ் டிரைவர் வரை நல்வாழ்வு துறையில் பணியாற்றும் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.

– கதிர்வேல்

Comments (0)
Add Comment