‘அந்த அறிக்கை என்னுடையதல்ல; ஆனால்..!’ – ரஜினிகாந்த்

சென்னை: சமீபத்தில் எனது பெயரில் வெளியான கடிதம் உண்மையானதல்ல… ஆனால் அதில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் உண்மை என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அறிவிப்பு வெளியிட்டார் ரஜினிகாந்த். அறிவிப்பு வெளியிட்ட கையோடு தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றி உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தினார். பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் கூட நடந்தது.

வழக்கமான அரசியல் கட்சிகளுக்குள் ஏற்படும் அத்தனை சர்ச்சைகள், குழப்பங்கள் ரஜினியின் இயக்கத்திலும் தோன்றியது. நிர்வாகிகள் மாற்றப்பட்டார்கள், நீக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. கட்சி ஆரம்பிப்பது, அரசியல் களப்பணிகள் போன்றவற்றில் தாமதம் செய்து வந்த ரஜினி, இந்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது மார்ச் மாதம் தனது அரசியல் குறித்து புதிய விளக்கம் வெளியிட்டார் ரஜினிகாந்த். அதில் முதல்வர் பதவி மேல் தனக்கு ஆசையில்லை என்றும், முதல்வர் வேட்பாளராக தாம் ஒருபோதும் நிற்க மாட்டேன் என்றும் அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். முழுமையான அரசியல் மாற்றம் குறித்து மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால்தான் தான் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறினார். இது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது ரசிகர்களிடம். அதன் பிறகு கொரோனா காலம் ஆரம்பித்துவிட்டது. நாடு முழுவதுமாக முடங்கிப் போயிற்று. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ரஜினி கட்சி. அரசியல் பற்றிய பேச்சுகள் அடங்கியிருந்த நிலையில், இப்போது மீண்டும் ரஜினி அரசியல் பற்றிய செய்திகள், வதந்திகள் அதிக அளவில் சமூக வலைத் ,தளங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

விஜயதசமியன்று ரஜினி தன் புதிய கட்சி குறித்து அறிவிப்பார் என சிலர் கொளுத்திப் போட, அதுகுறித்து தீவிர விவாதங்கள் நடந்தன. அப்போதுதான் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்று ரஜினியின் கடிதம் என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ரஜினி அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகவும், அதற்கான காரணங்களாக சில விஷயங்களையும் வெளியிட்டது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த நிலையில் அதுகுறித்தி இன்று ட்விட்டரில் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். அதில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களில் தீவிரமாகப் பரவிக் கொண்டுள்ளது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்துள்ள அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, என் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்,” என்று கூறியுள்ளார்.

Political entryrajinikanthஅரசியல்ரஜினிகாந்த்
Comments (0)
Add Comment