சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்!

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி(இந்தியததொழில்நுட்பக் கழகம்) முதல் முறையாக இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கப் போகிறோம் என்கிறார் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி.

செ

ன்னை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் அமையும் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய’த்துக்கு இளையராஜா மே 20ம் தேதி மாலை அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “மொசார்டுக்கு பிறகு 200 ஆண்டுகளாக உலகம் மற்றொரு மொசார்ட்டை உருவாக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையத்திலிருந்து 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும். ஒருவனுக்கு தண்ணீர் கொடுக்காதே, தாகம் கொடு, தண்ணீரை அவன் தேடிக்கொள்வான். இசைகற்க கிராமத்திலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்த போது எனது அம்மா எனக்கு நானூறு ரூபாய் கொடுத்து அனுப்பினார். இசை என் மூச்சானது. நான் சாதித்ததாக கூறுகிறார்கள், ஆனால் இப்போதும் அந்த கிராமத்திலிருந்து கிளம்பி வந்த சிறுவன் போலவே உணர்கிறேன்,” என்று பேசினார்.

இந்த முயற்சி நாடு முழுவதுமே கவனத்தை ஈர்த்துள்ளது, அதேசமயம் தொழில்நுட்பம் சார்ந்த ஐ.ஐ.டி படிப்புகளில் இசையமைப்பாளர் பெயரிலான ஆராய்ச்சி மையம் என்ன செய்ய முடியும் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் புதிய வளாகத்தின் நோக்கம் ‘அனைவருக்குமான இசை’ என்று கூறப்படுகிறது. இந்த மையம், மனிதனுக்கும் இசைக்குமான தொடர்பை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ள பயன்படும், இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் இசை தொடர்பான படிப்புகளும், இசைக் கருவிகளை வடிவமைத்து ஆராயும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று சென்னை ஐ.ஐ.டி கூறுகிறது.

இது தொடர்பாக ஐ.ஐ.டி இயக்குநர் டாக்டர். வி காமகோடி பிபிசி பேசுகையில், “சென்னை ஐ.ஐ.டி-யில் தொழில்நுட்பப் படிப்புகளைத் தாண்டிப் பிற கலைகளுக்கும் இடமுண்டு. வளாகத்தில் கலை நிகழ்வுகள் பல நடைபெறுகின்றன. இசைக் குழுக்கள் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் திறன்களை வெளிப்படுத்துகிறார்கள்,” என்றார்.

இந்த இசை ஆராய்ச்சி மையத்தை இளையராஜாவே அவ்வப்போது நேரடியாக வழி நடத்துவார் என்றும், பாடல் உருவாக்கம் குறித்து தனது குழுவினருடன் விரிவாக நடத்திக் காட்டுவார் என்றும் டாக்டர் காமகோடி தெரிவித்தார்.

இந்த மையத்தின் பாடத்திட்டம், வகுப்புகள், சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்பு விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ் நாடு அல்லது ஏதாவது ஒரு தென் மாநிலத்தில் இசைப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது இளையராஜாவின் நீண்டகால விருப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

IITMaestro Ilaiyaraajaஇளையராஜாஐஐடி
Comments (0)
Add Comment