ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி… 16 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்பு!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த வெங்கிடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் யூட்டிகா (வயது 13). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கனமழையால் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் வீட்டிலிருந்த யூட்டிகா உள்ளிட்ட 3 பேர் மழைவெள்ளத்தை வேடிக்கை பார்க்க சாஸ்திரம்பாக்கம் மதகுக்கு சென்றனர்.

அங்கு தென்னேரி, குருவன்மேடு, வடக்குப்பட்டு ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரி சாஸ்திரம்பாக்கம் ஆற்றில் பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் கரைகளைத் தாண்டி வயல்வெளிகளில் பாய்ந்த வெள்ளம், சாலையின் மீது சுமார் 5 அடி உயரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆர்ப்பரித்துச் சென்ற இந்த வெள்ளத்தை வேடிக்கை பார்த்தபடி விளையாடி கொண்டிருந்த 3 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் 2 பேரை மீட்டுவிட்டனர். அதற்குள் யூட்டிகா வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.

யூட்டிகாவை சாஸ்திரம்பாக்கம் கிராமத்தினர் வெள்ளத்தில் இறங்கி தேடினர். தகவலறிந்து மறைமலைநகர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இரவு 10 மணி வரை தேடியும், வெள்ளத்தின் வேகம் அதிகம் இருந்ததால் யூட்டிகாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகாலையில் கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து படகு வரவழைக்கப்பட்டது.

படகில் தேடியபோது, சாலையிலிருந்து 400 மீட்டர் தூரத்தில் அதிக ஆழம் கொண்ட பகுதியில் புதரில் மாணவி சடலமாக சிக்கிக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து மீட்டார்கள்.

இந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவி வெள்ளத்தில் மூழ்கிய இடம்
ChengalpattufloodGirl Studentசெங்கல்பட்டுமழை வெள்ளம்மாணவி மரணம்
Comments (0)
Add Comment