கல்கியின் பொன்னியின் செல்வன் அத்தனை நேர்த்தியாகவா படமாக்கப்பட்டிருக்கிறது?

பொன்னியின் செல்வன் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இணைய வெளியெங்கும் பொன்னியின் செல்வன் விமர்சனங்களே ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பாலும் வியப்பு கலந்த பாராட்டுகள்.. கொஞ்சம் எதிர்மறை… அவற்றில் பெருமளவு வன்மம். இந்த வன்மம் கலைக்கே ஆபத்தானது. ஒருவித மனநோய். சமூக ஊடகங்களில் இவர்களின் ஆதிக்கமே அதிகம்!

சரி, கல்கியின் பொன்னியின் செல்வனை மணிரத்னம் படமாக்கிய விதத்தில் குறைகளே இல்லையா…

இருக்கின்றன.

குந்தவை – வந்தியத்தேவன் பழையாறைச் சந்திப்பின்போது, அப்போதுதான் முதன்முதலில் பார்த்துக் கொள்வதைப் போல இருவரின் பேச்சும் படத்தில் இருக்கும். ஆனால் அதற்கு முன்பே குடந்தை சோதிடர் வீடு மற்றும் ஆற்றங்கரையில் அறிமுகமாகி பேசியதை ஓரிரு வசனங்கள் மூலம் தொடர்புபடுத்தியிருக்கலாம்.

புதினத்தின் மிக முக்கிய காட்சிகளுள் ஒன்று, வந்தியத்தேவன் – பூங்குழலி அறிமுகக் காட்சி. அதைக் காட்டாமல், இருவரும் படகில் செல்லும் காட்சியை திடுமென்று காட்டுவது.

இலங்கை மணிமுடியை வந்தியத் தேவனை சாட்சியாக வைத்துத்தான் மறுப்பார் அருண்மொழி. படத்தில் அந்தக் காட்சியில் வந்தியத் தேவன் இடம்பெறவே இல்லை.

முக்கியமாக, குந்தவை காஞ்சிக்குச் செல்லவே இல்லை. ஈழத்திலிருந்து திரும்பி வந்த பிறகு வந்தியத் தேவன்தான் செல்வான்.

பழுவேட்டரையர் – நந்தினி காட்சிகள், கல்கியின் எழுத்தில் ஏற்படுத்திய உணர்வை, திரையில் தரத் தவறியிருப்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இந்தப் படத்தின் பிழைகளில் சிகரம்… ஈழம் என்ற வார்த்தையை முற்றாகத் தவிர்த்திருப்பது. சிங்களர் பகுதியை இலங்கை என்றும், தமிழர் நிலத்தை ஈழம் என்றும் கல்கி எழுதியதைத்தானே பயன்படுத்தப் போகிறார் மணிரத்னம்… அதற்கு ஏன் இவ்வளவு பயம்?

சோழனின் புலிக்கொடியையும் பாண்டியனின் மீன் கொடியையும் தெளிவாகக் காட்டுவதில் என்ன பிரச்சினை மணிரத்னத்துக்கு?

இந்தப் படத்தின் இசை, பாடல் வரிகள் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என்பதில் இரண்டாவது கருத்தில்லை. ‘இவர் இசையமைத்திருக்க வேண்டும்… அவர் பாடல் எழுதியிருக்க வேண்டும்’ என்று சொல்ல வரவில்லை. யாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது இயக்குநரின் வசதி. ஆனால் அந்த இணையின் இறுதிவடிவம் ரசிக்கும்படி இல்லை என்று சொல்லும் உரிமை படம் பார்த்த அனைவருக்கும் உள்ளதே!

ஆனால் பொன்னியின் செல்வனை திரையில் ரசிக்கும்போது, இந்தக் குறைகள் சிறு நெருடல்களாகக் கடந்து போகின்றன. அந்தப் பெருங்கதைக்கு, அதன் படைப்பாளியான அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு செய்யப்பட்ட ஒரு பிரமாண்ட அர்ப்பணிப்பாகவே இந்தப் படத்தை பெரும்பாலானோர் எடுத்துக் கொண்டது, படத்தின் வசூலில் தெரிகிறது!

– சேட்டு சங்கர்

CriticismsKalkiPonniyin Selvan movieகல்கிபொன்னியின் செல்வன்விமர்சனம்
Comments (0)
Add Comment