நூறு நாள் சாதனையா? வேதனையா?

திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நூறு நாட்களைக் கடந்துள்ளது; இன்றும் சாதனைகளை விளக்கி நாளிதழ்களில் விளம்பரங்கள் தொடர்கின்றன. ஆளவந்தாருக்கு வேண்டியவர்கள் ஆதரவாகவும், எதிர்க்கட்சியினர் எதிராகவும் கருத்துகளை முன்வைத்துள்ளனர். நடுநிலையாக பார்த்தோம் எனில் ஆட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை என்பதையே நாம் மீண்டும், மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

சட்டமன்றத்தில் வெளிநடப்புகள் தொடங்கிவிட்டன; இப்போது வெளியில் அதிமுக. சட்டைக் கிழிப்பு காட்சிகள் அரங்கேறும் நாளை விரைவில் நாம் சந்திக்க நேருமோ? சட்டமன்றக் காட்சிகளே போதும், இரண்டு கழகங்களின் ஆட்சியின் மாண்பை அறிந்து கொள்ள. ஒரு கழகம் ஒரு வாதத்தை வைத்தால், இன்னொரு கழகம் நீங்கள் என்ன குற்றம் அற்றவர்களா? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியவர்களா? என்று புலிப்பாய்ச்சல் காட்சிகள் அரங்கேறுகின்றன.

அரசு ஒப்பந்தப் பணிகளில் ஆளும் கட்சியினரின் ஆதிக்கம் தொடர்கிறது. சில சமயங்களில் எல்லை மீறி அவர்களுக்கிடையே மண்டை உடைப்பு சம்பவங்களும் அரங்கேறுகின்றன. தேர்வுகளில் எளிய வினாக்களுக்கு முதலில் விடை அளிக்கும் போட்டியாளர்களைப் போல் சில எளிய வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு, கொள்கை ரீதியாக அறிவித்த நீட் தேர்வு ரத்து, எழுவர் விடுதலை போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இன்னும் இந்த அரசு நொண்டியடித்துக் கொண்டு இருக்கிறது. பல தரப்புகளில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக பெட்ரோல் விலை மட்டும் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டு, டீசல் விலை குறைப்பு செய்யாததற்கு சப்பைக்கட்டுகள் கட்டப்படுகின்றன.

வேளாண் துறைக்கு முதன்முதலாக தனியாக வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திட்டங்கள் திறமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வருகின்றதா என்பதை கண்காணிப்போம். கொள்முதலுக்கு வரும் நெல், மழையில் நனைந்து வீணாகிப் போவதை முதலில் தடுத்து நிறுத்துங்கள்.

கடன் வாங்கி, கடன் வாங்கி தமிழ்நாட்டை முடித்து விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே 40 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டார், பழனிவேல் தியாகராஜன். அடுத்த தவணை 90,000 ஆயிரம் கோடி வாங்குவதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆக ஆட்சி முடிவில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி மொத்தமாக பத்து லட்சம் கோடி கடனில் கொண்டு வந்து நிறுத்துவார். வரி போடாவிட்டால் அரசு நடத்துவது எப்படி? என்றவர், இப்போது கடன் வாங்கி ஆட்சி நடத்த முடிவு செய்துவிட்டார்.

கழகங்களின் கடந்த ஆட்சியில் ஊழலுக்கு உற்சவம் நடத்தியவர்களே, அதிகார மையங்களாக உருமாறிக் கொண்டிருக்கும் சூழலில் அல்லது மன்னிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று நடமாடும் காலத்தில், நூறு கோடி ரூபாய் வரவு செலவுத் திட்டத்தில் தமிழகத்தை தலை நிமிர்ந்த மாநிலமாக மிளிரச் செய்த பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி நெஞ்சில் நிழலாடுவதை மறக்க முடியவில்லை. கழகங்களின் பிடியில் இருந்து தமிழகம் விடுபடதா? என்று மனதில் குமைந்து கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களின் குரல் ஒரு நாள் விடிவை சந்தித்தே தீரும் என்பதே காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.

– பா குமரய்யா
காந்திய மக்கள் இயக்கம்

100 days of MK Stalin100 நாள் ஆட்சிCM MK StalinDMK GovgtTamilaruvi Manianதமிழருவி மணியன்திமுக அரசுமுதல்வர் முக ஸ்டாலின்
Comments (0)
Add Comment