முதல்வர் அய்யா… என் உயிருக்கு ஆபத்து!’ – பரபரப்பு கிளப்பிய இயக்குநர் சீனு ராமசாமி

சென்னை : கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமாக்கியவர். விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என பட்டம் வழங்கியதோடு, அவரை வைத்து தர்மதுரை என்ற சூப்பர் ஹிட் படத்தையும் கொடுத்தார்.

அண்மையில் முத்தையா முரளிதரன் சினிமா விவகாரத்தில், விஜய் சேதுபதி விலகிக் கொள்வது நல்லது என முதலில் கருத்து தெரிவித்தவர் சீனு ராமசாமிதான்.

இந்நிலையில் இன்று காலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் திடீரென, “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம், ” என சீனு ராமசாமி பதிவிட்டிருக்கிறார். சீனு ராமாசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது அனைவரையும் தன் வீட்டுக்கு வரச் சொன்னார். 

https://twitter.com/seenuramasamy/status/1321304921929637892?s=20

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சீனு ராமசாமி. அப்போது அவர், “முத்தையா முரளிதரன் பட பிரச்சனையில் எல்லோரையும் போல விஜய் சேதுபதிக்கு நானும் வேண்டுகோள் வைத்தேன். அதில் இருந்து தொலைபேசி மூலமாக எனக்கு மிரட்டல்கள் வருகின்றன.

எனக்கும் விஜய் சேதுபதிக்கும் தனிப்பட்ட பிரச்சனை போல இதனைச் சித்தரிக்கின்றனர். எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி கூர்மையாக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதுபற்றி விஜய் சேதுபதியிடமும் நான் பேசினேன்.

விஜய் சேதுபதியின் ரசிகர்கள் என்னுடைய தம்பிகள். அவர்கள் இதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். நமக்கு இடையே யாராலும் முரண்பாடுகளை உருவாக்க முடியாது என விஜய் சேதுபதியும் என்னிடம் கூறியிருக்கிறார்.

ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் நள்ளிரவிலும் மிரட்டல் விடுக்கின்றனர். அதனால்தான் ட்விட்டரில் அப்படி ஒரு பதிவைப் போட்டேன். இது தொடர்பாக போலீசில் எழுத்துப்பூர்வமாகவும் புகார் தர இருக்கிறேன், ” என்றார்.

Director Seenu Ramasamylife threatvijay sethupathiஉயிருக்கு ஆபத்துசீனு ராமசாமிவிஜய் சேதுபதி
Comments (0)
Add Comment