ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு கடும் தண்டனை! – பொற்கொடியிடம் முதல்வர் முக ஸ்டாலின் உறுதி

சென்னை: சென்னை பெரம்பூரில் இரு தினங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டார் பகுஜன் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்.

அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த கொலைச் சம்பவம். அரசியல் கட்சித் தலைவர் அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். பெரும்பாலும் தமிழக சட்டம் ஒழுங்கு மற்றும் கொலையாளிகளுக்கு கடும் தண்டனை தரவேண்டும் என்பதாகவே அக்கருத்துகள் இருந்தன.

இந்த நிலையில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த அவர், பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதுகுறித்து தனது வலைதளப் பக்கத்தில் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:

“பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.

இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்!”

Armstrong MurderCM Stalinஆம்ஸ்ட்ராங் கொலைமுக ஸ்டாலின்
Comments (0)
Add Comment