குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து… முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழப்பு

சென்னை: கோவை மாவட்டம் சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் நோக்கி இன்று விமானப்படைக்கு சொந்தமான மிக்-17வி5 ரக ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட மொத்தம் 14 பேர் பயணித்தனர். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப்படை கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து எரிந்தது.

இதில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் உள்பட 10 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்களின் கதி என்னவானது என தெரியவில்லை.

மீட்கும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. விபத்து நடைபெற்ற பகுதி முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்துள்ளார்.

Bipin RawatChopper CrashIndian Armyஇந்திய ராணுவம்பிபின் ராவத்ஹெலிகாப்டர் விபத்து
Comments (0)
Add Comment